தஞ்சாவூர், ஆக.21: நாடு முழுவதும் பெண்களுக்கெதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து தஞ்சாவூர் அரசு சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி முதுகலை பயிற்சி மாணவி கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் என தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாட்டிலும் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இது போன்ற மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
மேலும், இது போன்ற பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்ட செய்தனர். இதில், மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.