சென்னை, ஜூன் 7: பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் எளிதில் அணுகக்கூடிய நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான பாலினம் உள்ளடக்கிய வழிகாட்டுதல்களுக்கான கையேட்டினை மேயர் பிரியா நேற்று வெளியிட்டார். பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் எளிதில் அணுகக்கூடிய நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான பாலினம் உள்ளடக்கிய வழிகாட்டுதல்களுக்கான கையேட்டினை மேயர் பிரியா நேற்று திருவான்மியூர், எம்.ஆர்.டி.எஸ். பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
முன்னதாக பொது இடங்களில் பெண்களை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள “அவள் இடம்” புகைப்படக் கண்காட்சியினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்தப் புகைப்படக் கண்காட்சியானது நேற்று முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெறும். உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் “சென்னை மாநகர கூட்டமைப்பு திட்டம்” மற்றும் ஒன்றிய அரசின் “நிர்பயா திட்டங்களின்” கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு அரசின் மூலம் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் உருவாக்கப்பட்டு 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகத்தின் சார்பில் பூங்காக்கள், கடற்கரைகள், தெருக்கள், பொது இடங்கள், திறந்தவெளி மற்றும் உள்ளரங்க அங்காடிகள், இ-சேவை மையங்கள், சுரங்கப்பாதைகள், நடைமேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள இடங்கள் போன்ற 12 பொது உள்கட்டமைப்புகளுக்கான பொதுவான வடிவமைப்புக் கொள்கைகளை உள்ளடக்கிய கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்குள் செயல்படும் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட இந்த கையேடானது, திட்டமிடல், செயல்முறைகளில் பாலினம், பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெண்களை முதன்மைப்படுத்தப்படுவதற்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் தொடர்ச்சியான முயற்சிகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. வல்லுநர்களிடமிருந்தும், வேறுபட்ட பாலினத்தவர்கள், வயதினர், திறன்களமைந்தோர் என பல்வேறு பயனர் குழுவினரிடமிருந்தும் விரிவான ஆலோசனைகள் பெறப்பட்டு அதனடிப்படையில் இந்தக் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், ஆணையர் குமரகுருபரன், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் உறுப்பினர், செயலர் ஜெயகுமார், ஐ.ஆர்.டி.எஸ், வட்டார துணை ஆணையர்கள் அமித், கட்டா ரவி தேஜா, அடையாறு மண்டலக்குழு தலைவர் ஆர்.துரைராஜ், மாநகராட்சியின் சிறப்புத் திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளர் சீனிவாசன், பாலின கொள்கை ஆய்வகத்தின் வல்லுநர்கள் வைஷ்ணவி, உத்ரா சோமாஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.