அலங்காநல்லூர், ஜூன் 16: பாலமேடு அருகே நேற்று நடைபெற்ற அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பாலமேடு அருகே வலையபட்டியில் அமைந்துள்ள பெரியபட்டி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷே விழா நேற்று நடைபெற்றது. இதற்காக இரண்டு நாட்கள் முன்னதாக யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில் முதல்கட்டமாக மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து யாகசாலையில் அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலை மேளதாளம் முழங்க புனித நீர் வைக்கப்பட்டிருந்த குடங்கள் கோயிலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோயில் கோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஜமீன்தார்கள், பெரியபட்டி அம்மன் கோயில் வகையறாவை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு இருந்தது.