தர்மபுரி, ஜூலை 3:பாலக்கோடு, குண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தன் (41). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மதியம், பாலக்கோடு காவல் நிலையத்துக்கு மனு கொடுப்பதை போல, கையில் ஒரு ‘கட்டை’ பையுடன் வந்துள்ளார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், பையில் இருந்து பெட்ரோல் கேனை எடுத்து, தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்தி நிறுத்தி, பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.
அதை தொடர்ந்து அவர் பெட்ரோல் கேனுடன் வந்ததற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தியதில், தனது அண்ணன் வடிவேல், தனது நிலத்தில் இருந்த பைப்பை உடைத்துள்ளார். நிலத்தகராறு குறித்து அவர் மீது, கடந்த 10 மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து நித்யானந்தனை போலீசார் கைது செய்தனர்.