பாலக்காடு, ஜூன் 19: பாலக்காடு ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேற்கு வங்க வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்.
பாலக்காடு டவுன் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விபிண் வேணுகோபால் தலைமையில் ரயில்வே போலீசார் பயணிகளின் உடமைகள் சோதனையில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வாலிபர் ஒருவர் ரயில் நிலையம் அருகே நின்றவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் மேலும், சந்தேகமடைந்த போலீசார் அவரது உடமையை சோதனை போட்டுள்ளனர். இதில் 2.060 கிலோ கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அந்த வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கஞ்சா விற்றவர் மேற்கு வங்கம் நாதியா மகாதேபூரை சேர்ந்த ராஜ்பால் சர்க்கார் (26) என தெரியவந்தது. இவர் தன்பாத் ஆலப்புழா எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்தி வந்ததாவும், வடமாநில தொழிலாளர்களுக்கு கொண்டுவந்தவை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வாலிபர் மீது கஞ்சா கடத்தல், விற்பனை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் போலீசார் அடைத்தனர்.