பழநி, ஆக. 19: பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்படுவதாக தொப்பம்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: பாரம்பரிய நெல் ரகங்களை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் துறையின் மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி, சீரக சம்பா விதைகள் கீரனூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கிலோ ரூ.25 என்ற விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும். மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் தங்களது ஆதார், சிட்டா நகலுடன் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி விதைகளை மானிய விலையில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.