சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் 2023-24ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்த 1.50 லட்சம் மாணவ, மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
கடந்த ஆண்டும் இதேபோல், தற்காலிக பட்டச்சான்று வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது.மாணவர்கள் பட்டம் படிப்பதன் நோக்கம் உயர்கல்வி கற்கவும், வேலைகளுக்கு செல்வதற்காகத்தான். அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செயல்படக் கூடாது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் இந்த வார இறுதிக்குள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தற்காலிகப் பட்டச் சான்றிதழும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.