மதுரை, ஆக. 1: மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் தந்தை பாலகணபதி ஓய்வு ெபற்ற ஆசிரியர். வீட்டில் கடந்த 14.9.2010ல் தூங்கியபோது பாம்பு கடித்து இறந்தார். வன விலங்குகளால் தாக்கப்பட்டு இறந்தால் ரூ.4 லட்சம் வரையில் இழப்பீடு வழங்கப்படுகிறது. என் தந்தை பாம்பு கடித்து இறந்ததால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இழப்பீடு கேட்டு ஏற்கனவே ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தேன். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 2010ல் நடந்த சம்பவத்திற்கு இழப்பீடு கோரி 2022ல் மனு செய்துள்ளதாககூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
அந்த உத்தரவை ரத்து செய்து உரிய இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர், மனுதாரர் இழப்பீடு கோரி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும். எனவே, தள்ளுபடி செய்த உத்தரவில் தலையிட வேண்டியதில்லை என்பதால் இந்த அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.