ராமநாதபுரம்,செப்.14: ராமநாதபுரம் அருகே வகுப்பறையில் பாம்பு கடித்த மாணவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்புல்லானி அருகே களிமண்குண்டு கிராமத்தை சேர்ந்த மாணவன் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வகுப்பறையில் பாடம் படித்து கொண்டிருந்த போது மேஜைக்கு கீழே மாணவன் கையில் ஏதோ கடித்துள்ளது. வலி தாங்க முடியாமல் மாணவன் அலறியுள்ளான்.
இதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மேஜை அடி பகுதியில் சோதனை செய்ததில் கொடிய விஷமுள்ள விரியன் பாம்பு இருந்துள்ளது. அதனை அடித்து கொன்று விட்டு மாணவனை உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆசிரியர்கள், பெற்றோர் கொண்டுச் சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.