ஊத்தங்கரை, செப்.28: ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை நிரம்பியது. இதனையடுத்து, அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு நீர்த்தேக்கம் 1983ம் ஆண்டு கட்டப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை, அங்குத்தி சுனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அணைக்கு தண்ணீர் வருகிறது. பாம்பாறு அணையின் மொத்த உயரம் 19.68 அடி. அணையில் திறக்கப்படும் நீர் மூலம் ஊத்தங்கரை வட்டத்தில் மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரியபெருமாள் வலசை உட்பட 12 கிராமங்களில் 2501 ஏக்கர், தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் தா.அம்மாப்பேட்டை, வேடகட்டமடுவு, மேல்செங்கம்பாடி, ஆண்டியூர் உள்ளிட்ட 4 கிராமங்களில் 1499 ஏக்கர் உட்பட 4 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், ஜவ்வாது மலையில் பெய்த தொடர் மழையால், பாம்பாறு அணைக்கான நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து, அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாம்பாறு அணை நிரம்பியது
59
previous post