பாப்பாரப்பட்டி, மே 28: பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், நேற்று காலை முதலே பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. அவ்வப்போது சூறைக்காற்று வீசியது. இதில் கடைவீதியில் கடைகளில் சாமான்கள் மற்றும் சாலையில் கடைகள் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டூவீலர்கள் சரிந்து விழுந்தன.
மதியம் 3 மணியளவில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடைகளில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டதால், மழைநீர் செல்ல வழியின்றி, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும், சூறைக்காற்று வீசியதில், கிராமப்பகுதிகளில் மாமரங்களில் இருந்து மாங்காய்கள் உதிர்ந்து கீழே விழுந்தன.
இரண்டு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள், காற்றுக்கு உதிர்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியதால், பயிர் சாகுபடி பணிகளை தொடங்க உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். வத்திமரதஹள்ளி கிராமத்தில் வரகு விதைக்க வயலை தயார் படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.