கும்பகோணம், ஜூன் 10: கும்பகோணம் அருகே பாபநாசம் பத்ரகாளியம்மன் ஆலய பால் குட திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ரயில்வே ஸ்டேசன் ரோட்டில் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பத்ரகாளியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.