தர்மபுரி, ஆக.30: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, பெரும்பாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என 10க்கும் மேற்பட்ட பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில், நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி, பெரும்பாலை எஸ்எஸ்ஐ மாதையன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் கொட்டாயூர், பழையூர், தின்னூர், அரக்காசனஅள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள 5 மளிகை கடைகளில், தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்த 5 கடை உரிமையாளர்களுக்கு தலா ₹25 ஆயிரம் வீதம் ₹1 லட்சத்து 25 அபராதம் விதித்தனர். மேலும், 5 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.