திருச்செங்கோடு, மே 30: மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை மலைக்குன்றில் பாதை அமைக்கும் பணியினை திட்ட இயக்குனர் வடிவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை மலைக்குன்றில் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்கிழமை உள்ளிட்ட தினங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
அது மட்டுமல்லாது வருடந்தோறும் பங்குனி உத்திரத்தன்று, தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் படியின் மூலமாக தான் செல்ல வேண்டும். இதனால் மக்கள் சிரமப்பட்டனர். மக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம், ரூ.4 கோடியே 55 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் பாதை அமைக்க கடந்த மார்ச் 3ம்தேதி பூமிபூஜை போடப்பட்டு, தற்சமயம் மலைக்குன்றில் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இப்பணியை நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மல்லசமுத்திரம் பிடிஓ பாலவிநாயகம், உதவி பொறியாளர்கள் அருண், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.