திருவண்ணாமலை, ஆக.22: திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரடி ஆய்வு நடத்தினார். கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும், டாக்டர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல், நோயாளிகளுடன் வருவோர் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுதல் போன்ற சம்பவங்களை தடுக்கவும், மருத்துவமனைகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது அவசியமாகியிருக்கிறது.
எனவே, மருத்துவமனைகளின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு நடத்தினார். அப்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு நடத்தினார். அப்போது, புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் புற காவல் நிலையத்தையும் பார்வையிட்டார்.
மேலும், உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதித்தார். அதையொட்டி, உணவு சமைக்கும் இடத்துக்கு நேரில் சென்று உணவை சாப்பிட்டு பார்த்தார். உணவு பொருட்கள், காய்கறிகள் தரமானதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும், அவசர சிகிச்சை பிரிவில் எந்த நேரத்திலும் கூடுதலான டாக்டர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போதுள்ள சிசிடிவி கேமராக்கள் போதுமானதாக இல்லை என்பதால், கூடுதலான இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றார்.
பின்னர், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதல்வரின் உத்தரவுபடி, மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, அரசு தெரிவித்துள்ள நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்திருக்கிறோம். கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழு அளிக்கும் பரிந்தரையின் அடிப்படையில், விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சுற்றுச் சுவர் கட்டுமான பணிகள், பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தும் இடங்கள் மற்றும் மருத்துவமனையை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதற்காக, பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, எஸ்பி பிரபாகர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஹரிஹரன் உள்பட துறை தலைவர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.