பந்தலூர், ஜூலை 27: பந்தலூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை குழந்தைகளின் நலனுக்காக பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுவதற்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நீதிமன்றம் அருகே செயல்பட்டு வருகிறது. இது மேடான ஒதுக்கு புறமாக போதிய இடவசதி இல்லாமல் இருந்து வருகின்றது. இதில் ஆரம்ப காலத்தில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில், தற்போது 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
ஆய்வு செய்வதற்கு கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சென்று வருவதற்கும் சிரமமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு சென்று வர முடியாத நிலையும் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
தற்போது பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சில கட்டிடங்கள் பயன்படுத்தாமல் இருந்து வருவதால் அந்த கட்டிடங்களில் துவக்கப்பள்ளியை செயல்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை விரைந்து செயல்படுத்தவும் பெற்றோர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.