திருவாரூர், ஆக. 27: பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது, குடவாசலில் மாநில பொது செயலாளர் குடவாசல் தினகரன் தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் செல்வதுரை, மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் குருமூர்த்தி, தியாகராஜன் மற்றும் பொறுப்பாளர்கள் ராஜகோபால், வடிவேல், ரவிசந்திரன், கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 15 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, வரும் 30ந் தேதி ஜி.கே.மூப்பணார் நினைவு நாளில் நலத்திட்டங்கள் வழங்குவது, வரும் உள்ளாட்சி தேர்தலில் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவது, மாவட்டத்தில் அனைத்து பகுதி வாய்க்கால்களுக்கும் நீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் சம்பாபருவத்திற்கு தேவையான விதை மற்றும் உரங்களை தட்டுபாடின்றி வழங்க அரசை கேட்டுகொள்வது.
மின்சாரம் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வால் நடுத்தர குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கட்டண உயர்வை திரும்ப பெற அரசை கேட்டுக்கொள்வதுடன் அடிக்கடி ஏற்படும் மின்தடையினை சரிசெய்திட கேட்டுக்கொள்வது, வலங்கைமானிலிருந்து குடவாசல் செல்லும் சாலையினை மேம்படுத்திட வேண்டும், பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.