மதுரை, மே 19: மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளில் இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாநகராட்சி 67வது வார்டுக்கு உட்பட்ட எச்எம்எஸ் காலனி பகுதியில், பாதாள சாக்கடை அடைப்பினை சுத்தப்படுத்தும் பணியில் பணியாளர் ஒருவரை ஈடுபடும் காட்சி, சமூகவலைதளங்களில் வெளியானது.
இந்த வீடியோவில் பாதாள சாக்கடை குழாய்க்குள் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் பணியாளர் இறங்கி வேரலை செய்கிறார். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றவும், பாதாள சாக்கடைகளில் ஆட்களை இறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்பேரில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.