மதுரை, செப். 2: மதுரை ரிங் ரோட்டில் உள்ள பாண்டி கோவில் பகுதியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை மேலமடை பகுதியில் அமைந்துள்ள பாண்டி கோயில், மதுரையின் முக்கிய கோயில்களில் ஒன்றாக இருக்கிறது. இக்கோயிலுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கிடாய் வெட்டி விருந்து வைத்து நேர்த்தி கடன் செலுத்தவும் வருகை தருகிறார்கள். அதற்காக பாண்டிகோவில், சாலையில் பல்வேறு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமையை என்பதால் காலை முதலே அதிகளவில் கனரக வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்த பக்தர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தியால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமானது. இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். வாரம் தோறும் இது போன்று நடப்பதால் வரும் காலங்களில் விதி மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நெரிசலை தவிர்க்கும் பணிகளை மேற்கொள்ளவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.