கடலூர், ஆக. 18: கடலூர் முதுநகரில் கடலூர்-சிதம்பரம் சாலை மிக முக்கிய சாலையாக உள்ளது. சிதம்பரம், கும்பகோணம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலையைதான் கடந்து செல்ல வேண்டும். இத்தகைய பிரதான சாலையில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பாட்டிலால் தனது கழுத்தை கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட அந்த வழியாக சென்ற கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் உடனடியாக மணிக்கூண்டு அருகே வந்து, அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் மீண்டும் பாட்டிலால் கழுத்தை கிழித்துக்கொண்டார். இதனால் அந்த வாலிபரை சமாதானப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அந்த வாலிபரின் அருகே சென்று நைசாக பேசி அந்த வாலிபரை பிடித்தனர். பின்னர் உடனடியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் அந்த வாலிபர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.