பாடாலூர், ஜூன் 23: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் த.பாலச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தாளாளர் கேசவ் பாலாஜி முன்னிலை வகித்து, யோகா பயிற்சிகளின் பயன்கள் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக கைப்பந்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பொற்கொடி வாசுதேவன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உடல்நலம், ஆரோக்கியம் மற்றும் மனதை ஒருமுகப்படுத்தும் தன்மையை வளர்க்கும் வழிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
மேலும், 7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், சீதாலி பிராணயமா, ஜானுசிர்சாசனா, உஸ்த்ராசனம், பத்ராசனம், அதோமுக ஸ்வானாசனம் உள்ளிட்ட ஆசனங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை 21 தினங்கள் முறையாக கடைபிடிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் விழாவிற்கு ஏற்பாடு செய்து கொடுத்த பள்ளித் தாளாளர், ஆசனங்களை கற்றுக் கொடுத்த உடற் கல்வி ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.