பாடாலூர், ஆக.25: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புஜங்கராயநல்லூர் ஜெமீன் பேரையூர் கிராமத்தில் ஸ்ரீநாகமுத்து மாரியம்மன், மனக்காட்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புஜங்கராயநல்லூர் ஜெமீன் பேரையூர் கிராமத்தில் அருள்பாலித்து வரும் விநாயகர், முருகன், நாகமுத்து மாரியம்மன், மனக்காட்டு மாரியம்மன், அன்னை காளிகாம்பாள் ஆகிய ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி செவ்வாய்க்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதனையடுத்து மூலவர் சுவாமிகளுக்கு குடமுழுக்கும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புஜங்கராயநல்லூர் ஜமீன் பேரையூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை புஜங்கராயநல்லூர் ஜெமீன் பேரையூர் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.