தண்டையார்பேட்டை, மே 28: கொருக்குப்பேட்டை மணலி சாலையில் பாஜ மாநில நிர்வாகி நடராஜன் என்பவருக்கு சொந்தமாக ராஜன் ட்ரேடர்ஸ் என்ற பெயரில் பழைய பிளாஸ்டிக், பேப்பர், அட்டை உள்ளிட்ட பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று மதியம் ஊழியர்கள் பொருட்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பேப்பர் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறிக் கூச்சலிட்டபடி குடோனில் இருந்து வெளியேறினர்.
மேலும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இணைந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.நகர் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.