ஷில்லாங்: மேகாலயாவில் பாஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த எச்எஸ்பிடிபி எம்எல்ஏவின் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அங்கு போட்டியிட்ட பிராந்திய கட்சியான எச்எஸ்பிடிபி கட்சியானது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில் எச்எஸ்பிடிபியை சேர்ந்த எம்எல்ஏக்களான மிதோடியஸ் தாகார், ஷக்லியார் வார்ஜ்ரி ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென என்பிபி- பாஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தனர். இதனால் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில் ஷில்லாங்கில் உள்ள மிதோடியஸ் அலுவலகம் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். என்பிபி கட்சியின் மூத்த தலைவரான பிரிஸ்டோன் டைன்சாங் கூறுகையில், ‘‘எச்எஸ்பிடிபியை சேர்ந்த ஆதரவாளர்கள் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சென்று தீ வைத்துள்ளனர். இவர்கள் எம்எல்ஏக்களின் அரசியலமைப்பு உரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர். இதுபோன்ற செயல்கள் நிகழ அனுமதிக்க மாட்டோம். இது மக்கள் உரிமைக்கு எதிரானது’’ என்றார்….