ஆரணி, ஜூலை 4: ஆரணி டவுன் மையப்பகுதியில் உள்ள சூரிய குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி இந்து முன்னணியினர் மற்றும் பஜாகவினர் உட்பட 60 க்கும் மேற்பட்டோர் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது, மனு அளிக்காமல் கூட்டமாக நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த ஏடிஎஸ்பி அண்ணாதுரை, டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையிலான போலீசார் அவர்களிடம் அரசு அலுவலகத்தில் கூட்டமாக செல்லாமல் 5 பேர் மட்டு சென்று, மனு அளித்து விட்டு செல்லுமாறு போலீசார் அறிவுத்தினர்.
இதனால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து சாலைமறியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போலீசார் மறியலில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை விடுவித்தனர். ஆரணி நகராட்சியில் மனு கொடுக்க சென்ற இந்து முன்னணியினரை கைது செய்ததை எதிர்த்து செய்யாறில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். வந்தவாசியில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி, பாஜவினர் 21 பேர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை விடுவிக்கப்பட்டனர்.