திருப்புவனம், செப்.1: திருப்புவனம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், கோட்டூரை சேர்ந்தவர் சங்கரலிங்கம்(28). இவர், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து வந்தார். மணலூர் பகுதியில் மனைவியுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கழுகேர்கடை பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதை சரி செய்வதற்காக சங்கரலிங்கம் டூவீலரில் அப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
தட்டான்குளம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சங்கரலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் சங்கரலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ்சை ஓட்டிவந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரேமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் இறந்த சங்கரலிங்கத்திற்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் ஆனது.