கே.வி.குப்பம், நவ.9: கே.வி.குப்பம் அருகே அரசு பஸ்சில் படியில் தொங்கியதை தட்டிக்கேட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடிவருகின்றனர். கே.வி.குப்பத்தில் இருந்து குடியாத்தத்திற்கு காட்பாடி- குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அரசு பஸ் சென்றது. பஸ்சில் கே.வி.குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சென்றனர். அதில் பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் படியில் தொங்கிய படி சென்றுள்ளனர். அவர்களை பஸ்சினுள் வருமாறு பி.கே.புரத்தைச் சேர்ந்த நடத்துனர் கோட்டீஸ்வரன்(45) கூறியுள்ளார். அப்போது ஒரு மாணவன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில் நடத்துனர் அந்த மாணவன் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனது கிராமத்திற்குண்டான பஸ் நிறுத்தமான கீழ் ஆலத்தூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அந்த மாணவன் இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதே அரசு பஸ் இரவு 7 மணியளவில் கே.வி.குப்பத்தில் இருந்து குடியாத்தத்திற்கு மீண்டும் வந்துள்ளது. பின்னர் கீழ் ஆலத்தூருக்கு வந்தபோது நடத்துனரிடம் அடி வாங்கியதாக கூறப்படும் மாணவனும் அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் நின்றிருந்தார்கள். அவர்கள் கோட்டீஸ்வரனிடம், மாணவன் கன்னத்தில் அறைந்தது குறித்து தட்டிக்கேட்டு வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த மாணவனின் தந்தை, உறவினர்கள் உட்பட 5க்கும் மேற்பட்டோர் நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுத்த ஓட்டுநர் திருநாவுக்கரசுவையும்(50) தாக்கியுள்ளனர்.
அப்போது பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவர் இதை தனது செல்போனில் வீடியோ எடுத்தாராம். இதனைக்கண்ட மாணவனின் தரப்பினர். அந்த செல்போனை பறித்து கீழே வீசி உடைத்துவிட்டு அவரையும் தாக்கியுள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த நடத்துனர், ஓட்டுநர் ஆகிய 2 பேரையும் பயணிகள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள், மாற்று நடத்துனர், ஓட்டுநரை அனுப்பி பஸ்சை குடியாத்தம் பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாணவன் நாகல் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. தொடர்ந்து மாணவனின் தந்தை மற்றும் உறவினர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.