திருப்புத்தூர், ஆக. 3: திருப்புத்தூர் பஸ் நிலையத்தில் நீண்ட வாள், திருடிய பணத்துடன் மதுரையைச் சேர்ந்த 2 வாலிபர்களை ரோந்து சென்ற போலீசார் கைது செய்தனர். திருப்புத்தூர் பஸ்நிலையத்தில் நேற்று அதிகாலை, இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் நீண்ட வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தனர். அங்கு ரோந்து வந்த திருப்புத்தூர் டவுன் போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம், பனையூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சசிகுமார் மகன் அர்ஜூணன் (22), பனையூர் அடக்கி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனியாண்டி மகன் ஆதிமூலம் (26) என்பது தெரிய வந்தது. இருவரும் மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அருகே, கருங்காலக்குடி பெட்ரோல் பங்கில் வாளைக் காட்டி மிரட்டி பணத்தை திருடி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் வந்த மதுரை மாவட்ட கிரைம் போலீசார், இருவரையும் பிடித்து கொட்டாம்பட்டி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.