கோவை, செப். 3: கோவை காந்திபுரத்தில் இருந்து பல பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி டைமிங் பிரச்னையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தனியார் பஸ் ஊழியர்கள் சிலருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதேபோல், நேற்று முன்தினம் மீண்டும் அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகே இரண்டு தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
இது குறித்து இரு தரப்பிலும் பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் தனியார் பஸ் ஊழியர்களான நாதேகவுண்டன்புதூரை சேர்ந்த சிவபிரகாஷ் (37), பச்சாபாளையத்தை சேர்ந்த கண்டக்டர் விக்னேஷ் (26), மற்றொரு தரப்பில் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்த பஸ் டிரைவர் ஸ்ரீ மணிகுமார் (24), கண்டக்டர்கள் நாச்சிபாளையத்தை சேர்ந்த சிவா (21), ரஞ்சித் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.