கரூர், ஜூலை 23: கரூர் மாநகரில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், பிற மாநில பகுதிகளுக்கும் பஸ் வசதி உள்ளது. கரூர் மாவட்ட மைய பகுதியாக உள்ளதால் மக்கள் அதிகளவு கூடும் இடங்கள், பஸ் நிலையம், கோயில் விழாக்கள், பண்டிகை நாட்கள் போன்ற நாட்களில் பெண்களை குறி வைத்து, அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச் செல்லும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில், பஸ்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களை குறி வைத்து, அவர்களிடம் நைசாக பேசி, அவர்கள் அணிந்து செல்லும் நகைகளை திருடிச்செல்லும் நிகழ்வுகள் கரூர் மாவட்ட பகுதிகளில் தற்போது ஒரு சில பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன், திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த ஒரு பஸ்ஸில், வயதான பெண் ஒருவர், கரூரில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக பஸ்சில் தனியாக பயணித்துள்ளார்.
அப்போது, இடையில் வந்து பஸ்சில் ஏறிய அடையாளம் தெரியாத பெண்கள், அந்த பெண்ணிடம் நைசாக பேசிக் கொண்டே பயணித்துள்ளனர். ஒரு கட்டத்தில், அவர்கள் சாப்பிட உணவுப் பொருள் தந்துள்ளனர். அதனைச் சாப்பிட்ட அந்த பெண், பஸ்சில் மயங்கிய நிலையில் பயணித்தார். அப்போது, உடன் வந்த பெண்கள், மயங்கிய பெண்ணிடம் இருந்து நகைகளை பறித்துக் கொண்டு இடையிலேயே இறங்கியுள்ளனர். கரூருக்கு பஸ் வந்த போது மயக்கம் தெளிந்த பெண் தான் அணிந்திருந்த நகைககளை பறிகொடுத்தது குறித்து உறவினர்களிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதேபோல், சேலம் பகுதியில் இருந்து பஸ்சில் கரூர் வந்த பெண் அதிகாரியிடமும் இதுபோல நூதன முறையில் திருட்டு நடைபெற்றது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் பஸ் பயணத்தின் போதும், பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. எனவே, பெண்களுக்கு இதுகுறித்து தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.