திருச்சி, ஆக 26: திருச்சியில் பஸ்சில் செல்போனை திருடி தப்பியோடிய நபரை பயணிகள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று காலை மாநகரப் பேருந்து ஒன்று சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டது. தலைமை நிலையம் சிக்னலில் பஸ் நின்றபோது, பயணி ஒருவரின் செல்போனை பறித்துக் கொண்டு ஒருவர் தப்பி ஓடினார். அவர் சத்தம்போடவே சக பயணிகள் அந்த நபரை விரட்டி சென்றனர். பின்னர் தலைமை அஞ்சலக நுழைவாயில் அருகே அந்த நபரை பிடித்தனர். பின்னர் அவரை கண்டோன்மென்ட் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மேலும் ஒருவரிடம் திருடப்பட்ட மற்றொரு செல்போனும் இருந்தது. விசாரணையில் அவர் தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது இப்ராகிம் எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.