செய்யாறு, ஆக.18: செய்யாறில் பஸ்சில் சீட் பிடிக்கும் தகராறில் கல்லூரி மாணவர்கள் இடையே அடிதடி நடந்தது. அவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பட்டப்படிப்பு முதல் முனைவர் பட்டம் வரை 8,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும், ஆரணி, போளூர், திருவண்ணாமலை, செங்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம், மானாமதி, உத்திரமேரூர், ஆற்காடு உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் கல்லூரிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் வந்து செல்கின்றனர்.
அரசு சார்பில் மகளிருக்காக 2 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தாலும், பெரும்பாலும் இருபாலரும் ஒரே பஸ்சில் பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே, கல்லூரி நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், செய்யாறு- ஆரணி மார்க்கத்தில் செல்லும் பஸ்களில் தினந்தோறும் நெரிசல் காரணமாகவும், சக மாணவிகளுக்கு இடம் பிடித்து கொடுப்பதிலும் மாணவர்கள் இடைேய அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல், நேற்றும் கல்லூரியில் வகுப்புகள் முடிந்து மதியம் 1 மணியளவில் மாணவ, மாணவிகள் வெளியே சென்றனர். பின்னர், ஆரணி மார்க்கத்தில் சென்ற அரசு பஸ்சில் ஏறியபோது மாணவர்களுக்கு இடையே திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அப்போது, சில மாணவர்கள் தங்களது தோழிகளுக்காக பஸ்சில் இடம் பிடித்துள்ளனர். இதுதொடர்பாக, மாணவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்து பின்னர் கைகலப்பாக மாறியது. தொடர்ந்து, மாணவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் அங்கு போர்க்களம் போல் மாறி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, மாணவர்கள் ஆங்காங்கே கும்பல், கும்பலாக இருக்கவே அவர்களுக்குள் பிரச்னை ஏதும் ஏற்படாதவாறு அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். உடனே மாணவர்கள் ஓடிச்சென்று தங்களுக்குண்டான பஸ்களில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மாணவர்களுக்குள் நடந்த திடீர் மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.