தூத்துக்குடி, ஆக. 27: தூத்துக்குடியில் பஸ்சில் ஏற முயன்றபோது தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தார். தூத்துக்குடி அருகே உள்ள கீழக்கூட்டுடன் காடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி (59). இவர், தூத்துக்குடியில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 23ம் தேதி வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடி 3வது மைல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, பஸ்சில் ஏற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.