ஈரோடு, ஆக.30: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், நடுப்பாளையம் காலனியை சேர்ந்தவர் கொமரன் (73). இவரது மனைவி கருப்பம்மாள் (50). இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 27ம் தேதி மாலை 6 மணியளவில், பவானி ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக கூறிச் சென்ற கொமரன் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கருப்பம்மாள், அருகில் வசித்து வரும் தனது மகள்களுடன் சேர்ந்து தேடி பார்த்துள்ளார்.
நள்ளிரவு ஆகிவிட்டதால் அவர்கள் வீடு திரும்பி விட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் பவானி ஆற்றில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதாக கருப்பம்மாளுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அவர் அங்கு சென்று பார்த்தபோது, நீரில் முழ்கி கிடந்தது கொமரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே கொமரன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்