பெரியபாளையம், ஆக. 19: பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலில் ஆடி மாத விழா 14 வார காலம் வெகு விமர்சையாகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆடி மாத 5வது ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நேற்று அதிகாலை அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பிறகு உற்சவர் அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் கோயில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பால்வித்தார். இதன் பின்னர் பெரியபாளையம் முக்கிய வீதிகளிலும் உலா வந்தன. ஐந்தாம் வாரம் திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேலாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தமது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, சிறப்பு வழிபாடு செய்ய வந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டு தரிசனத்திற்கு பிறகு அம்மன் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த சாமி தரிசனத்தின்போது பாஜ மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் என பலர் வந்திருந்தனர்.