ஈரோடு,செப்.3: பவானியில் நெசவாளர்களுக்கு சொந்தமான பாவடி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நெசவாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. பவானி நகராட்சி அந்தியூர் மேட்டூர் பிரிவில் செங்குந்த கைக்கோள ரெட்டுக்கார முதலியார் நெசவாளர் சமூகத்திற்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இந்த இடத்தை பாவு நூல் நூற்பதற்காக கடந்த 150 ஆண்டுகளாக நெசவாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததையடுத்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து செங்குந்த கைக்கோள ரெட்டுக்கார முதலியார் சமூகத்தை சேர்ந்த நெசவாளர்களுக்கு சொந்தமான இடம் என்று கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பவாடிக்கு சொந்த இடத்திற்கு அத்து அளந்து கொடுக்காமல் இருப்பதோடு,அதில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்து வந்தது.
இதையடுத்து நெசவாளர்களுக்கு சொந்தமான பாவடியை அளந்து கொடுக்கவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரியும் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்ட தலைவர் நந்தகோபால்,செயலாளர் ஆசைத்தம்பி மற்றும் செங்குந்த கைக்கோள ரெட்டுக்கார முதலியார் நெசவாளர்கள் சார்பில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, இது தொடர்பாக கோபி கோட்டாட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.