ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.
அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரியபாளையத்தில் அதிகளவு பக்தர்கள் கூட்டம் கோயிலுக்கு வந்தது. இதனால் பெரியபாளையம் பாலத்திலும், பஜார் பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் புற வழிச்சாலை அமைப்பதற்கு அளவீடு செய்யப்பட்டு 8 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அதற்கான பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே புற வழிச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பஜார் பகுதியில் சாலையின் இருபுறமும் கடைகள் உள்ளதால் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆரணியாற்றின் குறுக்கே திமுக ஆட்சியில்தான் மேம்பாலம் கட்டப்பட்டது. அதே போல் அதன் அருகில் மற்றொரு புதியபாலம் கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.