சத்தியமங்கலம், ஆக.3: பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள புங்கார் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை சார்பில் ‘அட்மா’ திட்டத்தில் செம்மை கரும்பு சாகுபடி பயிற்சி பவானிசாகர் வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா தலைமையில் நடைபெற்றது. செம்மை கரும்பு சாகுபடியில் விதை பருக்கள் தேர்வு மற்றும் கரும்பு மரபியல் பண்புகள் பற்றி பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ரேணுகாதேவி விவசாயிகளுக்கு விரிவாக பயிற்சி அளித்தார். மேலும் செம்மை கரும்பு சாகுபடியில் உர மேலாண்மை மற்றும் நீரில் கரையும் உரங்கள், பயன்பாடுகள் குறித்தும் கரும்பு பயிருக்கு சொட்டு நீர்பாசன மானியங்கள் பற்றி பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.
செம்மை கரும்பு சாகுபடியில் நாற்றாங்கால் தயாரித்தல், கரும்பு நடவு செய்யும் கருவி மூலம் கரம்பு நாற்றுநடவு செய்யும் தொழில்நுட்பங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் பற்றி பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் ஈஸ்வரமூர்த்தி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். மேலும் தற்போது, கரும்பு பயிரில் பொக்கோ போயீ என்ற நோய் தாக்குதல் அறிகுறி மற்றும் கரும்பு பயிரில் பூச்சி நோய் தாக்குதல் பற்றியும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் பவானிசாகர் வட்டார வேளாண்மை அலுவலர் ஜெயச்சந்திரன் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி பேசினார். இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் தீபா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் கருணாம்பிகை மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அன்புராஜ், மீரா ஆகியோர் செய்திருந்தனர்.