ஊட்டி, ஆக.18: பல ஆண்டுகளாக ஊட்டி பழைய கார்டன் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு சாலைகளிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிரித்துள்ளன. குறிப்பாக பெட்டிக் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடந்துச் செல்லவோ அல்லது வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அவசர தேவைகளுக்கு கூட சில சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஊட்டியில் சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து பூங்கா செல்லும் பழைய கார்டன் சாலையோரங்களில் பயனற்ற பொருட்கள் மற்றும் ஏராளமான பெட்டிக்கடைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இவைகள் திறக்கப்படாமல், எந்நேரமும் மூடிக் கிடந்த நிலையில் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறாக இருந்தது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வந்தனர். இதனால் பயனற்று கிடந்த பெட்டிக்கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஜார்ஜ் மற்றும் வனிதா ஆகியோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நகராட்சி நகர் நல அதிகாரிகள் நேற்று இப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து பெட்டிக்கடைகளையும் எடுத்துச் சென்றனர். இதனால், இச்சாலையில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும், இப்பகுதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் நடக்காமல் இருக்க அப்பகுதியில் நடைபாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அனைத்து சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் எளிதாக வந்துச் செல்லவும், சமூக விரோத செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.