ராமநாதபுரம், செப்.4:பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பகுதியில் நேற்று மாலையில் ஜிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் அனைத்து துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார், சீனி முஹம்மது முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியகிரி வரவேற்றார். தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க மாவட்ட தலைவர் பழனிகுமார், ஊரக வளர்ச்சித் துறை சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 நிர்ணயம் செய்து அங்கன்வாடி, சத்துணவு, தலையாரிகள், ஊராட்சி செயலர்கள், வனத்துறை தொகுப்பூதிய ஊழியர்கள் என அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட இணைச் செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு அலுவலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்
previous post