நெல்லை, ஜூலை 28: பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் பால்ராஜ் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2003 ஏப்ரல் முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தி செயல்பாட்டில் உள்ளது. இதை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த 20 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 6 லட்சம் ஊழியர்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இறப்பு, பணி நிறைவு உள்ளிட்ட காரணங்களால் சுமார் 23 ஆயிரம் ஊழியர்கள் இத்திட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். ஊழியர்களின் பங்களிப்பாக பெறப்பட்ட சுமார் ரூ.60 ஆயிரம் கோடி எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழும் தமிழ்நாடு அரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.