பொன்னேரி, நவ. 30: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் இருந்து காட்டுப்பள்ளி செல்லும் சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். வடசென்னை அனல் மின் நிலையம், அதானி துறைமுகம், காமராஜர் துறைமுகம் என பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு பழவேற்காட்டில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பழவேற்காடு – காட்டுப்பள்ளி சாலை வழியே இரு சக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர். கருங்காலி பழைய முகத்துவாரம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் கடல் மணல் சாலைக்கு அடித்து வரப்படுவது வழக்கம். தற்போது வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல் காரணமாக கடல் தற்போது சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில் கருங்காலி பழைய முகத்துவாரம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீருடன் மணல் அடித்து வரப்பட்டு சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. மணல் திட்டுக்களாக மாறி உள்ள சாலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர். சாலை முழுவதும் மணல் திட்டுக்களாக மாறிய நிலையில் இருசக்கர வாகனங்கள் சாலையை விட்டு அருகிலுள்ள மணலிலேயே சென்று வருகின்றன. மணலில் செல்லும் பொழுது இருசக்கர வாகனங்கள் சிக்கிக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. புயல் போன்ற பேரிடர் காலங்களில் கடல் சீற்றம் ஏற்படும் போது இதே பாதிப்பை சந்தித்து வருவதாகவும், மாற்றுப் பாதையில் சுமார் 30 கிலோமீட்டர் வரை சுற்றி செல்வதால் கால விரையமும் பொருட்செலவும் அதிகரிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். போர்க்கால அடிப்படையில் சாலையில் குவிந்துள்ள மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.