திருக்காட்டுப்பள்ளி, ஆக.24: திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி அபிராமி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.பழமார்நேரி அபிராமி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குடமுழுக்கு கடந்த திங்கள் கிழமை மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை பூர்வாங்க பூஜைகளும், புதன்கிழமை மாலை முதல் கால யாக பூஜையும், வியாழக்கிழமை 2ஆம், 3ஆம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை 4 ஆம் கால யாக பூஜை நிறைவு செய்யப்பட்டு, மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. நாதஸ்வர இசையுடன் கடங்கள் புறப்பட்டு அனைத்து விமான கலசங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர், மூலஸ்தான மகாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு சாமி வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் பிரகதீஸ்வரன், ஆய்வாளர் ஜனனி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.