பழநி, ஆக. 24: பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி பிரமோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழா இந்த ஆண்டு கடந்த ஆக.15ம் தேதி காலை 9 மணிக்கு சிம்ம லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நடைபெறும் 11 நாட்களும் சாமி சப்பரம், அனுமார், சிம்மம், கருடன்ம், அன்னம், குதிரை வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்றிரவு பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
முன்னதாக காலை 7.30 மணிக்கு தேரேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு கன்யா லக்னத்தில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் தேவி- பூதேவி சமேதரராக அகோபில வரதராஜ பெருமாள் ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தார். இந்நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள், நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. ஆக.25ம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.