பழநி, செப். 2: பழநி நகரில் அதிகரித்துள்ள கொசுக்களின் உற்பத்தியை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சத்திரங்கள், காலிமனைகள், உணவகங்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கீழ்நிலை, மேல்நிலை தொட்டிகள், குடிநீர் சேமிப்பு சின்டெக்ஸ் தொட்டிகள், பிளாஸ்டிக் தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள் ஆகியவற்றில் கொசுப்புழு உருவாகாதவாறு மூடி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உடைந்த வாளி, பிளாஸ்டிக் கப், பூந்தொட்டி, ஆட்டுக்கல், சிரட்டை, பயனற்ற நிலையில் இருக்கும் கிரைண்டர், பிரிட்ஜ் ஆகியவற்றை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடு, வீடாகச் சென்று அபேட் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. நகரில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர்.மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.