பழநி, மே 18: பழநி அருகே தொப்பம்பட்டி வட்டாரத்தில் திண்டுக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அனுஷியா, மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (மாநில திட்டம்) காளிமுத்து, தொப்பம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் அப்துல் காதர் ஆகியோர் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் மற்றும் வேடசந்தூர் எஸ்ஆர்எஸ் வேளாண் மாணவர்களுடன் இணைந்து விவசாய பண்ணைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்ட வேம்பு, செம்மரம், மகோகனி மரங்களை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர். தொடர்ந்து ராகுல் பண்ணையில் அங்கக முறையில் விளைவிக்கப்பட்டுள்ள தென்னை, நெல்லி, எலுமிச்சை, தென்னையில் ஊடுபயிராக பயிரிடப்படுள்ள கோக்கோ மரங்களை பார்வையிட்டனர். பின்னர் நெல்லியை வத்தலாக மதிப்புக்கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து விவசாயிகள், மாணவர்களுடன் கலந்துரையாடினர்.