பழநி, மே 15: பழநி ரயில் நிலையம் வழியாக தினசரி சென்னை, கோவை, பாலக்காடு, திருச்செந்தூர், திருவனந்தபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பழநி ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. ரயில் நிலைய நடைமேடை, பயணிகள் காத்திருப்பு அறைகள், வாகன நிறுத்துமிடம், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான நகரும் படிக்கட்டுகள், உணவக வசதி, ரயில்கள் குறித்த அறிவிப்பு பலகை, நவீன மயமாக்கப்பட்ட வளாகம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் நேற்று சிறப்பு ரயிலில் பழநி ரயில் நிலையம் வந்த மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் வத்சவா அம்ரித் பாரத் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ரயில் நிலைய பணிகள் குறித்த வரைபடத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து ரயில் பயணிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பிட வசதிகளை பார்வையிட்டார். அப்போது கழிவறைகளை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைக்கும்படி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் சிறப்பு ரயிலில் திண்டுக்கல் சென்றார். இந்த ஆய்வின் போது ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் உடனிருந்தனர்.