பழநி, ஆக. 19: தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக நீதிமன்ற உத்தரவின்படி கிரிவீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் வரும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சுற்றுலா பஸ் நிலையங்களுக்கு செல்லாமல் கிரிவீதியை ஒட்டியுள்ள ஊராட்சி சாலைகளில் நிறுத்தப்படுகின்றன.
இதன் காரணமாக இச்சாலைகளில் ஏராளமான திடீர் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த வாகன நிறுத்துமிடங்கள் அந்தந்த ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் முறையான அனுமதி பெற்று இயங்கவில்லை என கூறப்படுகிறது. கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தாமல், முறையான அடிப்படை வசதிகளின்றி இயங்குவதாக கூறப்படுகிறது.
மேலும் முறையான அனுமதி பெறாததால் அந்தந்த ஊராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் தங்களது எல்லைகளில் முளைத்துள்ள திடீர் வாகன நிறுத்துமிடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.