பழநி, செப்.3: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே கணக்கன்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தொட்டி, பல ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்ததை அடுத்து, அதனை இடித்து அகற்ற ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பணி நேற்று நடந்தது. இதில், கரூர் மாவட்டம் பாலவிடுதியை சேர்ந்த இளையராஜா (32), சேங்கல் கிராமத்தை சேர்ந்த குணசேகர் (32) மற்றும் சி.புதூரை சேர்ந்த வடிவேல் (46) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
மூவரும் தொட்டியின் மேல் தளத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தொட்டி இடிந்து விழுந்தது.
இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழநி தீயணைப்புத்துறையினர், உயிரிழந்த இளையராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய மற்ற 2 பேரும் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஆயக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.