பழநி, மே 21: பழநி தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட துணை செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், விவசாயிகள் சங்க நிர்வாகி அருள்செல்வன் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. அரசு காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச பென்சனாக மாதம் ரூ.9 ஆயிரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதி ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, ஆஷா போன்ற திட்ட பணியாளர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கிட வேண்டும். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.